ஆணவக்கொலை செய்ய திட்டம்: பாதுகாப்புக்கு துப்பாக்கி உரிமம் வழங்கக்கோரி பெண் வக்கீல் மனு

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஆணவக்கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், எனவே தனக்கு துப்பாக்கி உரிமம் வழங்கக்கோரியும் காதல் திருமணம் செய்த பெண் வக்கீல் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தார்.

Update: 2019-05-20 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் சரண்யா. வக்கீல். இவர் நாச்சியார்கோவிலை சேர்ந்த பிரவீன்குமார் என்பவரை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த நிலையில் சரண்யா நேற்று தனது கணவர் பிரவீன்குமாருடன் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனிடம் ஒரு மனு கொடுத்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நானும், எனது கணவரும் சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளதால் என்னையும், எனது கணவரையும் ஆணவக்கொலை செய்ய சிலர் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் என்மீது பலமுறை கொலை வெறி தாக்குதலை நடத்தி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் நான் அச்சத்தில் உள்ளேன்.

மேலும் எனது கணவரை பழிவாங்கும் நோக்கில் ரவுடிகள் பட்டியலில் நாச்சியார்கோவில் போலீசார் சேர்த்துள்ளனர். ஆனால் எனது கணவர் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை. இதை எதிர்த்து எனது கணவர் வழக்கும் தொடர்ந்துள்ளார். இதன் காரணமாக போலீசாரும், சிலரும் சேர்ந்து எங்களை ஆணவ கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

நான் இது குறித்து 22 இடங்களில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய எனக்கு துப்பாக்கி உரிமம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பிரவீன்குமார் கொடுத்த மனுவில், நான் வேறு சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த ஒருவர் என்னை ரவுடி பட்டியலில் சேர்த்து விட்டார். இதன் காரணமாக என் மீது போலீசார் தொடர்ந்து பொய் வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதனால் நான் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்யும் நிலைக்கு தூண்டப்பட்டுள்ளேன். எனவே நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இருந்து எனது பெயரை நீக்கியும், எதிர்காலத்தில் என்மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதை தடுத்து நிறுத்தியும், எங்களை வாழ வழிவகை செய்ய உத்தரவிட வேண்டும்”என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்