அரியாங்குப்பம் அருகே ஓட ஓட விரட்டி வாலிபருக்கு சரமாரி வெட்டு மணல் திருட்டை தட்டிக் கேட்டதால் ஆத்திரம்

அரியாங்குப்பம் அருகே அரிக்கன்மேடு பகுதியில் மணல் திருட்டை தட்டிக் கேட்ட தகராறில் ஓடஓட விரட்டி வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-05-21 22:45 GMT
அரியாங்குப்பம்,

அரியாங்குப்பத்தை அடுத்த காக்காயந்தோப்பு ராஜீவ்காந்தி வீதியைச் சேர்ந்தவர் அஜீத் என்ற அஜீத்குமார் (வயது 22), கூலி தொழிலாளி. நேற்று பகல் அஜீத்தும், அவருடைய நண்பர் வீராம்பட்டினத்தை சேர்ந்த அபிமன்னனும் ஒரு மோட்டார் சைக்கிளில் வீராம்பட்டினத்தில் இருந்து காக்காயந்தோப்புக்கு சென்று கொண்டிருந்தனர். அஜீத் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தார்.

காக்காயந்தோப்பு அருகே சென்றபோது அவர்களை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்தது. அவர்களை பார்த்ததும் சுதாரித்துக் கொண்ட அஜீத், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினார்.

ஆனால் அவரை அந்த கும்பல் விடாமல் துரத்தியது. ஓட ஓட விரட்டி மடக்கிப் பிடித்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அஜீத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டிச் சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். நேற்று பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர தாக்குதல் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பலத்த காயமடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அஜீத் வெட்டப்பட்டு ரத்தம் வடிந்த நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதன்பின் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அஜீத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அஜீத்தை வெட்டிய கும்பலை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அஜீத்தை வெட்டிக் கொல்ல முயன்றது அரியாங்குப்பம் சுப்பையா நகர் மற்றும் மணவெளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அந்த கும்பல் அரிக்கன்மேடு பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதை வாலிபர் அஜீத் தட்டிக்கேட்டார். இந்த விவகாரம் தகராறாக மாறி முன்விரோதம் ஏற்பட்டது. இதையொட்டி அஜீத்தை அந்த மணல் திருட்டு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்