நெல்லையில் 103.1 டிகிரி வெயில் - பொதுமக்கள் கடும் அவதி

நெல்லையில் நேற்று 103.1 டிகிரி வெயில் பதிவானது. சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Update: 2019-05-21 22:15 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. இதனால் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் மள, மளவென்று குறைந்து விட்டது. மணிமுத்தாறு அணையில் மட்டும் குடிநீருக்கு தேவையான தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் பல இடங்களில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்கிறது. நெல்லையில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. நெல்லையில் நேற்று அதிகபட்சமாக 103.1 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசியது. இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்தவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். துணியால் தலை, முகப்பகுதியை மூடிக்கொண்டு வாகனங்களில் பயணம் செய்தனர். சாலையில் நடந்த சென்ற பெண்கள் பலர் குடைபிடித்தப்படி சென்றனர். வெயிலின் தாக்கத்தால் குளிர்பானங்கள், இளநீர், தர்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய் ஆகியவற்றின் விற்பனை அதிக அளவில் நடந்தது.

மேலும் செய்திகள்