நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி : பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி வெற்றியை அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

Update: 2019-05-23 23:00 GMT
மும்பை,

மும்பையில் உள்ள 6 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜனதா, சிவசேனா கட்சி வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர்.

இதனையடுத்து வெற்றி உறுதி என்பது தெரிந்த உடன் மும்பையில் பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சியினர் உற்சாக கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர்.

மும்பை நரிமன்பாயிண்ட் பகுதியில் உள்ள பா.ஜனதா கட்சியின் மராட்டிய மாநில தலைமை அலுவலகத்திற்கு கட்சி தொண்டர்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். காலை முதலே கட்சி தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் வந்து குவிந்தனர். இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நிறைவில் மும்பையில் உள்ள 6 தொகுதிகளிலும் பா.ஜனதா, சிவசேனா வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து மாலை பா.ஜனதா கட்சியினர் தேர்தல் வெற்றியை கொண்டாடினார்கள். பட்டாசுகள் வெடித்து உற்சாகத்தில் திளைத்தனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, மும்பையில் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்திற்காக 3 ஆயிரம் லட்டுகள் தயாரித்தனர்.

அந்த லட்டுகளை வழங்கியும், கலர் பொடிகளை தூவியும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை கொண்டாடினார்கள். பலர் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் உருவம் கொண்ட முகமூடிகளை அணிந்தபடி இன்னிசை வாத்தியங்கள் இசைத்து ஆடி பாடி வெற்றி களிப்பை உற்சாகமாக கொண்டாடினார்கள். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில் நரிமன்பாயிண்ட் பகுதியே உற்சாக மிகுதியில் திளைத்தது.

மும்பை தாதரில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகமான சிவசேனா பவன் முன் திரண்ட அக்கட்சி தொண்டர்கள் உற்சாக மிகுதியுடன் வெற்றியை கொண்டாடினார்கள். இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்கள். இதேபோன்று தாராவி, தாதர், காட்கோபர், ஒர்லி, கோலிவாடா, வில்லேபார்லே, சாந்தாகுருஸ், அந்தேரி, தானே, செம்பூர், சுன்னாப்பட்டி என மும்பை முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள பா.ஜனதா கிளை அலுவலகங்களில் கட்சித்தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கோலாகலமாக கொண்டாடினர். மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த கட்சித்தொண்டர்கள் பெரும்பாலானோர் தலைமை அலுவலகத்திற்கு வந்து நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை கொண்டாடிய வண்ணம் இருந்தனர்.

தேர்தல் தோல்வி காரணமாக மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் செய்திகள்