திருப்பூரில், பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பெயரளவிற்கு நடத்தப்படும் பிளாஸ்டிக் தடுப்பு சோதனைகள்

திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பெயரளவிற்கு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Update: 2019-05-24 23:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனால், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், வீடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன் குப்பைகள் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளில் அதிக அளவு பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கலந்து இருந்தன. பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்ததை தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.

இதையடுத்து பிளாஸ்டிக் பயன்பாடு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, பெரும்பாலான அதிகாரிகள் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி பல மடங்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநகருக்குட்பட்ட சாலையோர கடைகள், பூக்கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் வழக்கம் போல பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்தது. இதையடுத்து அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக மாநகருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் மூலம் பல டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து அதன் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், மாநகரில் உள்ள கடைகளில் தேவையான அளவு பாலித்தீன் பைகள் கிடைப்பதாகவும் திருப்பூரில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:–

திருப்பூரில், பின்னலாடை நிறுவனங்களுக்கு பாலித்தீன் பைகள் பயன்படுத்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்ட பின்னர் ஒருசில மாதங்கள் பிளாஸ்டிக் பயன்பாடு பெரும்பாலும் குறைந்தது. ஆனால் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் அவ்வப்போது கடைகளுக்கு சென்று சோதனை நடத்துவதாகவும், அபராதமும் விதித்து வருவதாகவும் தகவல்கள் வருகிறது. இந்த சோதனைகள் பெயரளவிலேயே நடத்தப்படுகிறது. திருப்பூரில் பல இடங்களில் பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனத்தினர் வெளிமாநிலங்களில் இருந்து பாலித்தீன் பைகள் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்கின்றனர். பின்னர் அவற்றை தயாரித்து மொத்த வியாபாரிகளிடம் கொடுத்து, கடைகளுக்கு மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனர். திருப்பூரின் பல இடங்களில் பெரிய அளவிலான மொத்த குடோன்கள் இருக்கின்றன. வடமாநிலத்தை சேர்ந்தவர்களும் இம்மாதிரியான குடோன்களை நடத்தி வருகின்றனர். இவற்றில் எதிலும் அதிகாரிகள் இதுவரை சோதனை நடத்தவில்லை.

சாலையோரங்களில் உள்ள கடைகள், பேக்கரிகள், மளிகை கடைகள் உள்ளிட்ட சிறிய அளவிலான கடைகளில் மட்டுமே ஆய்வுகளை நடத்தி அவற்றை பறிமுதல் செய்கின்றனர். இதனால் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனைகள் நடத்துவதுடன், மொத்த விற்பனை கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்வதுடன், அதிகபட்ச அபராதமும் விதிக்க வேண்டும். இவ்வாறு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முடியும்.

இல்லையென்றால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்கும். சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இல்லையென்றால் பாலித்தீன் பைகளுக்கு மாற்று வழி என்ன என்பது குறித்த விழிப்புணர்வை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும். மக்கும் தன்மையுடைய பாலித்தீன் பைகள் பயன்படுத்துவது குறித்தும், இயற்கை முறையிலான பொருட்களை பயன்படுத்து குறித்தும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தீவிரம் காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதும் தடுக்க முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக நடத்தப்படும் சோதனையில், பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதித்து வருகிறோம். ஆனால் பெரும்பாலான கடை உரிமையாளர்கள், பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக வாங்கி, குடோன்களின் மறைத்து வைத்துக்கொள்கின்றனர்.

பின்னர் தேவையான அளவுக்கு எடுத்து, வைத்து பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான மொத்த வியாபாரிகள் மறைவிடங்களில் குடோன்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் சேகரித்து வருகிறோம். மறைவிடங்களில் குடோன்கள் அமைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்