அனைத்து வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க எதிர்ப்பு: ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

வையம்பட்டி அருகே நடுப்பட்டி ஊராட்சியில் அனைத்து வீடுகளின் குடிநீர் இணைப்புகளையும் துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-26 23:00 GMT
வையம்பட்டி,

மணப்பாறை அருகே வையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் வையம்பட்டி அருகேயுள்ள நடுப்பட்டி பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

மேலும் குடிநீர் வினியோகம் செய்தாலும், சிலர் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுவதால் பிற பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்களில் ஒரு பகுதியினர் கடந்த 22-ந்தேதி ஊராட்சி அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்து அங்கு வந்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து வீடுகளின் குடிநீர் இணைப்பையும் துண்டித்து விட்டு, ஊருக்கு மையமாக 4 இடங்களில் தலா 10-க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் அமைத்தால், நீங்கள் அதில் தண்ணீர் பிடித்து கொள்வீர்களா? என்று கேட்டனர். அதற்கு பொதுமக்கள் சம்மதம் தெரிவித்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் தவறு செய்பவர்களின் வீட்டு குடிநீர் இணைப்புகளை துண்டிப்பதை விடுத்து, அனைத்து வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க மற்ற பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் நேற்று காலை நடுப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

உடனே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்தை நடத்தினார்கள். அப்போது, பொதுமக்கள் கூறும் போது, அனைவரும் ஒரே இடத்திற்குச் சென்று தண்ணீர் பிடிப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், தண்ணீர் பிடிக்கும் போது போட்டி போட்டு, ஒருவரை ஒருவர் தாக்கும் நிலை உண்டாகும் வாய்ப்பு உள்ளது. எனவே பொது இடத்தில் குழாய் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நடுப்பட்டி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்