சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் வால்டாக்ஸ் சாலை நுழைவுவாயில் அடைப்பு பயணிகள் அவதி

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் வால்டாக்ஸ் சாலை அருகே உள்ள நுழைவுவாயில் 1-க்கு செல்லும் வழி அடைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

Update: 2019-05-27 22:30 GMT
சென்னை,

தமிழகத்தில் உள்ள முக்கியமான ரெயில் நிலையங்களில் ஒன்று சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல். தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு அதிகப்படியான ரெயில்கள் இங்கிருந்து இயக்கப்படுகிறது. மேலும் கோவை, ஈரோடு, சேலம், நாகர்கோவில் போன்ற பகுதிகளுக்கும் எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து ரெயில் கள் இயக்கப்படுகின்றன.

தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருவதால் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இங்கு மொத்தம் 17 நடைமேடைகள் உள்ளன. இதில் 12 நடைமேடைகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்காகவும், 5 நடைமேடைகள் புறநகர் ரெயில்களுக்காகவும் செயல்பட்டு வருகிறது.

வால்டாக்ஸ் சாலை பகுதியில் இருந்து வரும் பயணிகள் சென்டிரல் ரெயில் நிலையத்தில் 1 முதல் 6-வது நடைமேடைகளுக்கு செல்ல நுழைவுவாயில் 1-ஐ பயன்படுத்துவார்கள். மேலும் வால்டாக்ஸ் சாலை வழியாக பயணிகளை ஏற்றி வரும் வாகனங்கள் சென்டிரல் ரெயில் நிலையத்தின் வால்டாக்ஸ் சாலையில் ஒருமுனை வழியாக உள்ளே வந்து பயணிகளை இறக்கிவிட்டு, பின்னர் மறுமுனை வழியாக வாகனங்கள் வெளியே செல்லும்.

இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 1 முதல் 6-வது நடைமேடைக்கு செல்ல எளிதாக இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நுழைவுவாயில் 1-க்கு செல்லும் வழி அடைக்கப்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வால்டாக்ஸ் சாலை வழியாக வாகனங்களில் வருபவர்கள் நுழைவுவாயில் 1 அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். வெகுநேரமாக வாகனங்கள் அங்கேயே நிற்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் யாரும் உள்ளே வரமுடியாத சூழல் உருவாகிறது.

இதன் காரணமாக முதலில் வால்டாக்ஸ் சாலை அருகே வாகனங்கள் வெளியேறும் பகுதியை மூடினோம். அதன் பின்னரும் வாகனங்கள் உள்ளே அதிக அளவில் நிறுத்தப்பட்டதால் நுழைவுவாயில் 1-க்கு உள்ளே வரும் வழியை அடைத்தோம். விரைவில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் சிரமம் இல்லாமல் இந்த வழியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்