அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் பிரசார பயணம்

அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் பிரசார பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2019-05-28 22:45 GMT
திருவாரூர்,

தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு பள்ளிகளை பாதுகாத்திட வேண்டும். அரசு பள்ளிகளை, தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்திட வேண்டும். ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகை ரூ.14 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும். மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு விலையில்லா பஸ் பாஸ், மடிக்கணினி, சைக்கிள், கல்வி உதவித்தொகை போன்றவற்றை கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை, கடலூர், கோவை, கன்னியாகுமரி வரை 1,500 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதில் கடந்த 25-ந்தேதி கடலூரில் இருந்து புறப்பட்ட சங்கத்தின் மாநில துணை செயலாளர் பிரகாஷ், மாநில துணைத்தலைவர் கண்ணன், மாவட்ட செயாலாளர் சுர்ஜித் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று திருவாரூர் வந்தடைந்தனர். மாவட்டம் முழுவதும் இந்த சைக்கிள் பிரசாரம் நடைபெற்று வருகிற 31-ந் தேதி திருச்சியில் நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்