பாலமேடு அருகே, குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

பாலமேடு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-05-29 22:15 GMT
அலங்காநல்லூர்,

பாலமேடு அருகே சரந்தாங்கி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஊராட்சி நிர்வாகமும் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவியாய் தவித்து வந்தனர். குடிநீர் தட்டுப்பாடு குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக கிராம மக்கள் பக்கத்து கிராமங்களில் உள்ள கிணறுகளுக்கு சென்று தலைச்சுமையாக தண்ணீர் எடுக்கும் நிலைமை இருந்து வருகிறது.

இந்தநிலையில் குடிநீர் சீராக வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் சரந்தாங்கி-வெள்ளையம்பட்டி இணைப்பு சாலையில் காலி குடங்களுடன் திரண்டனர். இதையடுத்து அவர்கள் குடிநீர் கேட்டு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக அந்த வழியாக வந்த அரசு பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் காத்து நின்றன.

மறியல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு குறித்த தகவல் அறிந்த பாலமேடு போலீசார், அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலா மற்றும் அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்து பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்