பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை; வாழை, பாக்கு மரங்கள் சேதம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் வாழை, பாக்கு மரங்கள் சாய்ந்து சேதம் அடிந்தன. இதற்கு இழப்பீடு வழங்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-05-31 22:45 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள் பலர் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். கோடை மழை பொழியுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடன், இடி, மின்னலுடன் பெரம்பலூர் மாவட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது. ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் உள்ளதால் பொதுமக்கள் பலர் தங்களது வீடுகளுக்கு தேவையான மழைநீரை பிடித்து சேமித்தனர்.

சிலர் மழையில் உற்சாக குளியல் போட்டனர். மேலும் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது. மேலும் மழை பெய்யும் போது பலத்த சூறைக்காற்று வீசியதால் பெரம்பலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் சேதமாகி கீழே விழுந்தன. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பம் சாய்ந்து கீழே விழுந்தது. பெரம்பலூர் வெங்கேடசபுரத்தில் உள்ள இரு சக்கர வாகனங்களின் விற்பனை செய்யும் ஷோரூமின் மேற்கூரை பலத்த காற்றுக்கு கீழே விழுந்ததில், அதன் கீழ் நிறுத்தியிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் சேதமாயின. மழை பெய்யும் போது மின்சாரம் தடை செய்யப்பட்டதால் எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை.

வேப்பந்தட்டை அருகே உள்ள மலையாளபட்டியை சேர்ந்த சரவணன்(வயது 40) என்ற விவசாயியின் நிலத்தில் இருந்த 600 பாக்கு மரங்கள் கீழே சாய்ந்து ஒடிந்து சேதமடைந்தது. மேலும் அதே ஊரை சேர்ந்த கண்ணுசாமி மனைவி சித்திரவள்ளி என்பவரது ஆட்டு பட்டியில் கட்டப்பட்டிருந்த ஒரு ஆடு மின்னல் தாக்கி உயிர் இழந்தது. இதேபோல் மலையாளபட்டியில் ஐம்பது ஆண்டு கால பழமையான அரசமரம் மீது மின்னல் தாக்கி மரம் கருகி சேதம் அடைந்தது. சூறாவளி காற்றுக்கு வெண்பாவூரை சேர்ந்த விவசாயிகள் மருதமுத்து, ராமர், பொன்னுசாமி, சடையன், வெங்கடாசலம் உள்ளிட்ட பலரது வயலில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள், தென்னை மரங்கள் கீழே விழுந்து சேதம் அடைந்துள்ளன.

எனவே தமிழக அரசு உரிய கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து வேப்பந்தட்டை தோட்டக்கலைத்துறை அதிகாரி நல்லமுத்து, உதவி தோட்டக்கலை அலுவலர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சூறாவளி காற்றினால் சேதமடைந்த பாக்கு மரங்களை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். கத்திரி வெயிலின் தாக்கத்தில் இருந்த பெரம்பலூர் மக்களுக்கு நேற்று முன்தினம் பெய்த மழை சற்று ஆறுதலை தந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பெரம்பலூர்- 20, செட்டிக் குளம்-9, வேப்பந்தட்டை-26, தழுதாழை-6, பாடாலூர்-2, எறையூர்-13, கிருஷ்ணா புரம்-15, வி.களத்தூர்-14.

மேலும் செய்திகள்