குடிநீர் கேட்டு, காலிகுடங்களுடன் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் - ராமநத்தம் அருகே பரபரப்பு

ராமநத்தம் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-01 22:30 GMT
ராமநத்தம்,

திட்டக்குடி, விருத்தாசலம், சிதம்பரம் பகுதியில் கடந்த ஒருமாதமாக குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இதன்விளைவாக பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராடி வருகின்றனர். கடும் வறட்சியால் குடிநீருக்காக போராடும் கிராம மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தற்காலிக முடிவை மட்டுமே அதிகாரிகள் எடுப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ராமநத்தம் அருகே கொ.குடிகாடு கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த விவரம் வருமாறு:-

ராமநத்தம் அருகே உள்ளது கொரக்கவாடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்ட கிராமம் கொ.குடிகாடு ஆகும். இங்கு 2,500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த ஓராண்டாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வந்தனர். குடிநீருக்காக விவசாய விளைநிலங்களுக்கும், பக்கத்து ஊர்களுக்கும் அலைந்து திரிந்தனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக முற்றிலும் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் இன்றி அவதியடைந்த கிராம மக்கள், குடிநீர் கேட்டு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முன்பு ஒன்று திரண்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் கொரக்காவடி-லட்சுமணபுரம் சாலையோரம் ஒன்று திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடிநீர் கேட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி தாசில்தார் புகழேந்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்