சாமிதோப்பில் வைகாசி திருவிழா தேரோட்டம் திரளானவர்கள் பங்கேற்பு

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது.

Update: 2019-06-03 22:30 GMT
தென்தாமரைகுளம்,

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா 11 நாட்கள் நடந்தது. 11-ம் நாள் விழாவான நேற்று தேரோட்டம் நடந்தது.

தேரோட்டத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும் தொடர்ந்து திருநடை திறத்தலும், காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் நடந்தது. பகல் 11 மணிக்கு தலைமைப்பதி பள்ளி அறையில் இருந்து அய்யா பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா கொலுவீற்றிருக்க மதியம் 12 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. காவி உடையுடன், தலைப்பாகை அணிந்த திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா... சிவ... சிவ... அரகரா... அரகரா... என்று பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சுருள் படைப்பு

முத்து குடைகள் முன்செல்ல தேர், கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. அங்கு பக்தர்கள் அய்யாவுக்கு தேங்காய், பழம், பூ , பன்னீர் ஆகிய பொருட்களை சுருளாக படைத்து வழிபட்டனர்.

மாலை 6 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு 9 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. 

மேலும் செய்திகள்