ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக புகார்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண்

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக புகார் தெரிவித்து தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-03 23:15 GMT
விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரிபுரத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 60). இவர் தனது மகன் தங்கபாண்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு அந்த ஊரைச்சேர்ந்த ஒருவரிடம் இருந்து நிலத்தை வாங்கி உள்ளார். தற்போது அந்த நிலத்தை திருப்பித் தருமாறும் அல்லது கூடுதல் தொகை தருமாறும் கேட்டு அதே ஊரைச் சேர்ந்த 10 பேர் முத்துலட்சுமி குடும்பத்தினரை மிரட்டி வருவதாகவும், ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஏற்கனவே போலீசில் முத்துலட்சுமி புகார் செய்துள்ளார். மேலும் இதில் நடவடிக்கை கோரி அவர் கடந்த வாரம் கலெக்டரிடமும் மனு கொடுத்தார்.

இந்தநிலையில் நேற்று முத்துலட்சுமி தனது மகன் தங்கப்பாண்டி (36), மருமகள் சுகந்தி (26), பேத்திகள் ஜனனி (8), கிருஷ்மா (4), பேரன் கார்த்திக் பாண்டி (3) மற்றும் 8 மாத பெண் குழந்தை மிருதுளா ஆகியோருடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். வரும்போதே தீக்குளிக்கும் எண்ணத்துடன் பெட்ரோல் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தனர். அங்கு முத்துலட்சுமி பெட்ரோல் பாட்டிலை எடுப்பதை கண்டு அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்தனர். மேலும் தீக்குளிக்க விடாமல் அவர்களை தடுத்தனர். கோரிக்கைகள் குறித்து கேட்டனர்.

தொடர்ந்து முத்துலட்சுமியையும், அவரது குடும்பத்தினரையும் சூலக்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்