சீர்காழி அருகே நாங்கூரில் 12 சிவபெருமான்-அம்பிகைக்கு திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சீர்காழி அருகே நாங்கூரில் 12 சிவபெருமான்-அம்பிகைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-06-04 22:30 GMT
சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி அருகே நாங்கூர் கிராமம் உள்ளது. சைவ, வைணவ கோவில்களை அதிகம் கொண்டுள்ள இவ்வூரை சுற்றி 11 திவ்யதேச பெருமாள் கோவில்களும், 12 பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களும் உள்ளன. முன்பொரு காலத்தில் நாங்கூரில் உள்ள மதங்காஸ்ரமத்தில் (மதங்கீஸ்வரர் கோவில்) மதங்க ரிஷி என்பவர் தவம் செய்தபோது பார்வதி தேவி பெண்ணாக அவதரித்து பின்னர் சிவபெருமானை திருமணம் செய்துகொண்டு, மதங்க ரிஷிக்கும், நந்தி தேவருக்கும் திருமண கோலத்தில் காட்சி தந்ததாக புராண வரலாறு கூறுகிறது.

இந்த நிகழ்வை போற்றும் வகையில் வைகாசி மாத ரோகிணி நட்சத்திரத்தையொட்டி நாங்கூரில் உள்ள மதங்கீஸ்வரர் கோவிலில் ரிஷப வாகனத்தில் மதங்கீஸ்வரர் உள்பட 12 சிவபெருமான்-அம்பிகைக்கு திருக்கல்யாணமும், நந்தி தேவருக்கு திருமண கோலத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு நேற்று முன்தினம் திருக்கல்யாணமும், நந்தி தேவருக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையொட்டி நாங்கூர் பகுதியில் உள்ள மதங்கீஸ்வரர், அமிர்தபுரீஸ்வரர், நம்புவார்கன்பர், கைலாசநாதர், செம்பதனிருப்பு நாகநாதர், திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர், திருயோகீஸ்வரம் யோகநாதர், திருசொர்ணபுரம் சொர்ணபுரீஸ்வரர், திருமேனிக்கூடம் சுந்தரேஸ்வரர், பெருந்தோட்டம் ஐராவதேசுவரர், அன்னப்பன்பேட்டை கலிக்காமேஸ்வரர், நயினிபுரம் நயனவரதேஸ்வரர் ஆகிய 12 கோவில்களில் உள்ள சிவபெருமான்கள்-அம்பிகைகளுடன் வீதி உலா சென்று நாங்கூர் கீழவீதியில் உள்ள மதங்கீஸ்வரர் கோவிலில் எழுந்தருளினர்.

ரிஷப வாகனம்

தொடர்ந்து சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் ரிஷப வாகனங்களில் எழுந்தருள செய்து, வேதமந்திரங்கள் முழங்க ஒரே நேரத்தில் 12 சிவபெருமான்களுக்கும்-அம்பிகைகளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்று இரவு 10 மணிக்கு மதங்க ரிஷிக்கும், நந்தி தேவருக்கும் திருமண கோலத்தில் காட்சி அளித்தனர்.

பின்னர் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘சிவ சிவ’ என சரணகோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கோவில் நிர்வாக அதிகாரிகள் முருகன், அன்பரசன், முருகையன், ஒருங்கிணைப்பாளர் நாகராஜ சிவாச்சாரியார், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்