தாம்பரம்– செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க நடவடிக்கை தேவை; தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தல்

தாம்பரம்– செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-06-05 23:15 GMT

விருதுநகர்,

தாம்பரம்–நெல்லை இடையே அந்தியோதயா ரெயிலை தென்னக ரெயில்வே நிர்வாகம் இயக்கி வந்த நிலையில் தற்போது இந்த ரெயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆகஸ்டு மாதமே தாம்பரம்–செங்கோட்டை இடையே அந்தியோதயா ரெயில் இயக்கப்படும் என கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ரெயிலை இயக்க எந்தவித தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு தற்போது பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலும், வாரம் 3 முறை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டததில் உள்ள வணிக நகரமான ராஜபாளையம், தொழில் நகரான சிவகாசி ஆகிய பகுதிகளில் வசிப்போருக்கு சென்னை செல்வதற்கு கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில் தென்னக ரெயில்வே நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாகவே உள்ளது.

எனவே ஏற்கனவே அறிவிக்கப்படி தாம்பரம்–செங்கோட்டை இடையே முன்பதிவு இல்லாத அந்தியோதயா ரெயிலை இயக்க வேண்டியது அவசியமாகும். மேலும் இந்த ரெயிலை செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் வழியாக மானாமதுரை அகல ரெயில்பாதையில் இயக்குவதுடன், அங்கிருந்து காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இதன் மூலம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிக பயணிகள் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படுதுடன், தென்னக ரெயில்வே துறைக்கு வருமானமும் அதிகரிக்கும் நிலை ஏற்படும்.

எனவே தென் மாவடங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள், இதுகுறித்து தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி கூறி, தாம்பரம்–செங்கோட்டை இடையேயான அந்தியோதயா ரெயிலை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்