“தமிழ் மொழியை வைத்து தி.மு.க. அரசியல் செய்கிறது” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

“தமிழ் மொழியை வைத்து தி.மு.க. அரசியல் செய்கிறது” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Update: 2019-06-06 22:30 GMT
கோவில்பட்டி, 

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிற மாநிலங்களில் தமிழ் பாடத்தை 3-வது மொழியாக அறிவிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து உள்ளார். ஆனால் தி.மு.க. அதனை மாற்றி தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்து மக்களிடம் பொய் பிரசாரம் மேற்கொள்கிறது. இதன்மூலம் மு.க.ஸ்டாலின் பித்தலாட்ட அரசியலை செய்து வருகிறார். அவர்கள் தமிழ் மொழிக்காக எதையும் செய்யவில்லை. தமிழை வைத்து அவர்கள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவிலேயே கடந்த 5 ஆண்டுகளாக உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் சிறந்த மாநிலமாக இருந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை என்பது மாநில அரசின் கீழ் தன்னாட்சி அமைப்பாக செயல்படுகிறது. உடல் உறுப்பு தானத்தில் உலக நாடுகளுக்கு இணையாக தமிழகம் செயல்பட்டு வருகிறது.

நீட் தேர்வுக்கு எதிராக கடைசி வரை போராடிய மாநிலம் தமிழகம் தான். தமிழகத்தில் மட்டும் தான் இதற்காக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலின்படி வேறு வழியின்றி தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்றைக்கும் நீட் வேண்டாம் என்ற நிலைபாட்டில் தான் நாங்கள் உள்ளோம். தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் 48.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் சிறந்த தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை குறித்து தமிழக முதல்-அமைச்சர் டெல்லி செல்லும்போது நிச்சயமாக அழுத்தம் கொடுப்பார். இதில் அ.தி.மு.க. அரசின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. பேரறிவாளனுக்கு தி.மு.க. ஆட்சியில் கூட பரோல் வழங்கப்படவில்லை. 27 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு பரோல் வழங்கியது அ.தி.மு.க. அரசு தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

கோவில்பட்டி சுபாநகரில் உள்ள பத்மாவதி சமேத திருவேங்கடமுடையான் சன்னதி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத நித்ய கல்யாண வேங்கடேசுவர பெருமாள் கோவிலில் 3-ம் ஆண்டு வருசாபிஷேக விழா நடந்தது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். அவரை கோவில் தலைவர் கனகராஜ் வரவேற்றார். வருசாபிஷேக விழாவை ஸ்ரீதர் அய்யங்கார் நடத்தினார்.

மேலும் செய்திகள்