விழுப்புரம் அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் அடித்துக்கொலை; தந்தை–மகன் உள்பட 9 பேரிடம் போலீசார் விசாரணை

விழுப்புரம் அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை–மகன் உள்ளிட்ட 9 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-06-07 22:45 GMT

விக்கிரவாண்டி,

விழுப்புரத்தை அருகே விக்கிரவாண்டி அடுத்துள்ள வடகுச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் மகன் தினேஷ்குமார் (வயது 24). டிரைவரான இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டி வந்தார்.

தினேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வரும் முண்டியம்பாக்கம் காலனியை சேர்ந்த முருகையன் (49) என்பவரிடம் சென்று சிகரெட் வாங்கிக்கொண்டு ரூ.500 கொடுத்ததாக தெரிகிறது. அதற்கு முருகையன், 500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என கூறியுள்ளார். இதனால் முருகையனுக்கும், தினேஷ்குமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த தினேஷ்குமார், முருகையனை தாக்கினார். இதை தடுக்க வந்த முருகையனின் மனைவி செண்பகவள்ளி, மகன் அகிலன் ஆகியோரையும் தினேஷ்குமார் தாக்கினார். இதை பார்த்ததும் தினேஷ்குமாருடன் பணிபுரியும் மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவர் சங்கர் அங்கு விரைந்து வந்து தகராறை விலக்கி இரு தரப்பினரையும் சமாதானம் செய்து தினேஷ்குமாரை அங்கிருந்து அனுப்பி வைத்தார். அதன் பிறகு தினேஷ்குமார், மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வழக்கமாக ஆம்புலன்ஸ் நிறுத்துமிடத்திற்கு வந்து நின்று கொண்டிருந்தார்.

இந்த சம்பவத்தை பற்றி கேள்விப்பட்டதும் முருகையனின் மூத்த மகன் ஆகாஷ் (21) அங்கு விரைந்து வந்து தாக்குதலில் காயமடைந்த தனது தந்தை முருகையன், தாய் செண்பகவள்ளி, தம்பி அகிலன் ஆகிய 3 பேரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

பின்னர் ஆகாஷ், தன்னுடைய நண்பர்களிடம் நடந்த சம்பவம் பற்றி கூறி அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து அவர்களுடன் சேர்ந்து தினேஷ்குமாரை அடித்தும், கல்லாலும், கண்ணாடி பாட்டிலாலும் சரமாரியாக தாக்கினார்.

இதில் தினேஷ்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சக ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே தினேஷ்குமார் இறந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராபின்சன், சப்–இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் தினேஷ்குமாரின் அண்ணன் திவாகர் புகார் செய்தார். புகாரின்பேரில் முருகையன், அவரது மகன் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்களான முண்டியம்பாக்கத்தை சேர்ந்த செந்தமிழ், கலையரசன், பார்த்தீபன், நவீன், சுரேஷ், சுதாகர், சிவநேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்