கலவை அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கலவை அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-08 22:15 GMT
ராணிப்பேட்டை,

கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்சினை உள்ளது. பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர வழங்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் நேற்று காலை ஆரணி - செய்யாறு சாலையில் மாம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

காலை நேரத்தில் மாம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியலால் ஆரணி- செய்யாறு, கலவை- வாழைப்பந்தல் ஆகிய சாலைகளின் வழியாக செல்வதற்காக வந்த பள்ளி, தொழிற்சாலை வாகனங்கள் மற்றும் பஸ்கள் செல்ல முடியாமல் அப்படியே நின்றன.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்களில் செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.

பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழைப்பந்தல் போலீசார் பொதுமக்களை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் வேதமுத்து மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் தற்காலிகமாக குடிநீர் வழங்கவும், ஒருவாரத்தில் தண்ணீர் பிரச்சினை சரி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்