விருத்தாசலம் அருகே சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்

விருத்தாசலம் அருகே சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-08 22:30 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த கோ.மங்கலம்–முகுந்தநல்லூர் இடையே சுமார் 4 கிலோ மீட்டருக்கு சாலை உள்ளது. இந்த சாலை பராமரிப்பு இல்லாத காரணத்தால் மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அப்பகுதி கிராம மக்கள் கடும் அவதியடைந்தனர்.

மேலும் மேற்கண்ட சாலையை உடனே சீரமைத்து அங்கு புதிதாக தரமான சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். அதன்படி, கடந்த 2017–18–ம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் நிதி உதவியின் கீழ் ரூ.1 கோடியே 61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

தற்போது இந்த தார் சாலை அமைக்கும் பணி தரமாக இல்லை என்றும், இந்த பணி குறித்த தகவல் பலகை எதுவும் பணி நடைபெறும் இடத்தில் வைக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று கோமங்கலத்தில் நடந்த இந்த சாலை அமைக்கும் பணியை கிராம மக்கள் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தரமான சாலை அமைக்கக்கோரி அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர்.

இது பற்றி தகவல் அறிந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள், சாலையை தரமாக அமைக்காவிட்டால் மறியல் உள்ளிட்ட பலகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்