கனகன் ஏரியில் கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு; நடைபாதை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

புதுச்சேரி கனகன் ஏரியை கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்தார். ஏரியின் நடைபாதை பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

Update: 2019-06-08 23:05 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில கவர்னராக கிரண்பெடி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்தது. அவர் கவர்னராக பதவி ஏற்றது முதல் வார இறுதி நாட்களில் பல்வேறு இடங்களுக்கு சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதுமட்டுமின்றி அரசு அலுவலகங்களிலும் அதிரடியாக புகுந்து அலுவலர்களின் வருகை மற்றும் பணிகள் குறித்து சோதனை நடத்தினார்.

அவரது இந்த நடவடிக்கையால் அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. ஆனாலும் தனது நடவடிக்கைகளை கிரண்பெடி மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வந்தார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் கடந்த 2 மாதங்களாக கவர்னர் கிரண்பெடி ஆய்வு பணிகள் எதையும் மேற்கொள்ளாமல் இருந்து வந்தார். தேர்தல் முடிவடைந்த பிறகும் இந்த நடவடிக்கைகளில் அவர் ஈடுபடவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை கவர்னர் மாளிகையில் இருந்து கவர்னர் கிரண்பெடி சைக்கிளில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள புறப்பட்டார். அங்கிருந்து ஆம்பூர் சாலையில் உள்ள பெரிய வாய்க்கால் மற்றும் திலாசுப்பேட்டை கனகன் ஏரி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு ஏரியை சுற்றி நடைபாதை பணிகள் முடிக்கப்படாமல் நிலையில் இருந்தது. நடைபாதை பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். ஆய்வு முடிந்தவுடன் கவர்னர் கிரண்பெடி மீண்டும் சைக்கிளிலேயே கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

புதுவை கவர்னர் கிரண்பெடி நேற்று ஆய்வு மேற்கொண்ட கனகன் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து கரையோரம் மிதந்தன. அவை செத்துக் கிடந்தது எப்படி? என்பது தெரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்