தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக 15,040 பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர்

தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக 15,040 பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர்.

Update: 2019-06-09 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு நேற்றுமுன்தினம் தொடங்கியது. 2-ம் தாள் தேர்வு தஞ்சை மாவட்டத்தில் 40 மையங்களில் நேற்று நடைபெற்றது. இத்தேர்வு எழுத 16,645 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் இவர்களில் 15,040 பேர் தான் தேர்வு எழுதினர். 1,605 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு மையங்களில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக தரௌத்தில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாத, வாய் பேச இயலாதோர், மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக 1 மணிநேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆசிரியர்கள் நியமனம்

இவர்கள் சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். அப்படி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், தேர்வர்கள் சொல்வதை தான் எழுதுகிறார்களா? என அவர்களை கண்காணிக்க தனியாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

தேர்வு எழுத வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். சிலர் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். அந்த குழந்தைகளை தங்களது கணவர் மற்றும் தாய், மாமியாரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர். தேர்வு எழுதிவிட்டு அவர்கள் திரும்பி வரும் வரை மரத்தடியில் அமர்ந்தும், அருகில் உள்ள கட்டிடங்களில் அமர்ந்தும் குழந்தைகளை பராமரித்து வந்தனர்.

மேலும் செய்திகள்