மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: அமைதி பேச்சுவார்த்தை தோல்வி

கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

Update: 2019-06-10 23:00 GMT
கபிஸ்தலம்,

கபிஸ்தலம் அருகே கொந்தகை ஊராட்சி நடுப்படுகை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபட்டனர். இதற்கு திருவைக்காவூர், நடுப்படுகை, தேவனோடை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர் ஆதாரம், விவசாயம் பாதிக்கும் என்பது பொதுமக்களின் கவலையாக உள்ளது. எதிர்ப்பை தொடர்ந்து அப்பகுதி கிராம மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாபநாசம் தாசில்தார் கண்ணன் முடிவு செய்தார். அதன்படி அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு தாசில்தார் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் திருவைக்காவூர், தேவனோடை, கீழமாஞ்சேரி மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் கருத்து தெரிவித்தனர்.

அதிகாரிகள் தொடர்ந்து சமாதானம் செய்த பின்னரும், கிராம மக்கள் எதிர்ப்பை கைவிடவில்லை. இதனால் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. முன்னதாக மணல் குவாரி அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் கிராம மக்களிடம் உறுதி அளித்தனர். கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் ஜெயமதி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்