மும்பையில் இடி, மின்னலுடன் பலத்த மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

மும்பையில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2019-06-10 23:15 GMT
மும்பை, 

மும்பையில் கோடை வெயில் கொளுத்தி வந்தது. இதனால் நகரில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க மும்பைவாசிகள் பருவமழையை பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்.இந்த நிலையில் பருவமழைக்கு முந்தைய மழை பெய்ய தொடங்கி உள்ளது.

நேற்று முன்தினம் இரவு மும்பையில் காட்கோபர், சயான், வில்லேபார்லே, செம்பூர், வடலா உள்பட பல்வேறு இடங்களில் திடீரென மழை பெய்தது. இந்த மழை சில நிமிடங்களே நீடித்தது. ஆனாலும் இந்த மழை இரவு பொழுதை இதமாக்கியது.

இந்தநிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் மும்பையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை 2 மணி நேரம் நீடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் இரவு பெய்த பலத்த மழையால் மும்பைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையேஇன்னும் 2 நாட்களுக்கு மும்பையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்தெரிவித்து உள்ளது.

வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவுகளை ஒட்டிய பகுதிகள், கிழக்கு மத்திய அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டு இருப்பதாகவும் இதன் காரணமாக மும்பை மற்றும் கொங்கன் பகுதியில் இன்று(செவ்வாய்க்கிழமை), நாளை(புதன் கிழமை) ஆகிய 2 நாட்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

லட்சத்தீவுகள், கேரளா, கர்நாடகா மற்றும் மராட்டியத்தின் தென்பகுதி கடல் பகுதியில் பலத்த மழை பெய்யக் கூடும். 40 முதல் 50 கி.மீ. வேகத்துக்கு காற்று வீசக்கூடும். இதனால் கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்