கடலூர்-மடப்பட்டு 4 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு - சமாதான கூட்டத்தில் விவசாயிகள் வாக்குவாதம்

கடலூர்- மடப்பட்டு 4 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் நடந்த சமாதான கூட்டத்தில் விவசாயிகள் வாக்குவாதம் செய்து, கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-10 22:30 GMT
கடலூர்,

கடலூரில் இருந்து மடப்பட்டு வரை இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்தவும், நெல்லிக்குப்பம் நகரம், வரக்கால்பட்டு, வெள்ளப்பாக்கம், செஞ்சி குமாரபுரம், கீழ்கவரப்பட்டு கிராமங்களில் புறவழிச்சாலை அமைக்கவும் கடந்த 2015-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

சுமார் ரூ.150 கோடியில் அமைய இருக்கும் இந்த திட்டத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி அளித்துள்ளது. இதையடுத்து இந்த திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த திட்டத்துக்கு விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று கடலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு சப்-கலெக்டர் சரயூ தலைமை தாங்கினார்.

இதில் சென்னை- கன்னியாகுமரி தொழில் தட சாலை திட்ட கோட்ட பொறியாளர் சுந்தரி மற்றும் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன், ராமாஜனும், சம்பத்குமார் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள், 4 வழிச்சாலை திட்டம், புறவழிச்சாலை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலாக கஸ்டம்ஸ் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் விவசாயிகள் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு, கலெக்டரிடம் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து கூட்டம் முடிந்தவுடன் வெளியே வந்த விவசாயிகள், 4 வழிச்சாலை திட்டத்துக்கு விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இருப்பினும் இந்த சம்பவத்தால் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்