சட்டத்துக்கு புறம்பாக வட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை கருத்தரங்கில் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு

சட்டத்துக்கு புறம்பாக வட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூரில் நடந்த கருத்தரங்கில் போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தெரிவித்தார்.

Update: 2019-06-11 23:00 GMT
கரூர்,

தொழில் நகரமான கரூரில் நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் பலர் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர். அவ்வாறு வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் அதை செலுத்த தவறும் பட்சத்தில் கந்து வட்டி கேட்டு துன்புறுத்துவதாக போலீஸ் நிலையங்களுக்கு புகார்கள் சென்றவண்ணம் இருந்தன.

இதுதொடர்பாக நிதி நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு வட்டி வசூலிப்பு சட்டம், உரிமம் பெற்று அதனை புதுப்பித்தல் உள்ளிட்டவை தொடர்பானவிழிப்புணர்வு கருத்தரங்கம் கரூர் திண்ணப்பா கார்னரில் உள்ள ஒரு ஓட்டல் அரங்கில் நேற்று நடைபெற்றது.

கடும் நடவடிக்கை

கருத்தரங்கிற்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

வட்டி வசூலிப்பு சட்டத்தின் மீதான புரிதலுக்காகத்தான் இந்த கருத்தரங்கம் நடக்கிறது. எனவே, அரசு நிர்ணயித்துள்ள வரைமுறைப்படி வட்டியை வசூலிக்க வேண்டும். மாறாக மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி, கம்ப்யூட்டர் வட்டி போன்றவை அனைத்தும் அதீத வட்டி வசூலிப்பு சட்டம் 2003-ன் கீழ் சட்டத்திற்கு புறம்பானது ஆகும். அவ்வாறு வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.25 ஆயிரத்திற்கு மேலான பண பரிவர்த்தனையை ஆர்.டி.ஜி.எஸ். முறையில் தான் மேற்கொள்ள வேண்டும்.

பொருட்களை ஜப்தி செய்வது...

மேலும் வட்டியை வசூலிக்கும் விதமாக சம்பந்தப்பட்ட நபரின் வீடுகளுக்குள் புகுந்து தன்னிச்சையாக பொருட்களை ஜப்தி செய்வது சட்டப்படி குற்றமாகும். அப்படியொரு சூழலில் யாரேனும் தற்கொலை செய்தால், அதற்கு தூண்டுதலாக இருந்ததாக வழக்குப்பதிவு செய்யலாம் என சட்டம் கூறுகிறது. அதற்காக பணத்தை வசூல் செய்யக்கூடாது என்று கூறவில்லை.

பணம் கட்ட யாரும் தவறினால் கோர்ட்டை நாடி சட்டபூர்வமாக ஆவணங்களை சமர்ப்பித்து முறையிடலாம். நிதிநிறுவன தொழில் செய்பவர்கள் வருவாய்துறையினரிடம் முறையான உரிமம் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உரிமம் பெற வேண்டும்

இதில் சிறப்பு விருந்தினராக கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில், கரூரில் குறைந்த அளவிலான நிதி நிறுவனங்களே உரிமம் பெற்றிருக்கின்றன. பலர் உரிமத்தை புதுப்பிக்காமல் உள்ளனர். கரூர் தாசில்தார் தான் உரிமம் கொடுப்பதற்கான அதிகாரி ஆவார். எனவே கட்டாயம் அனைத்து நிதி நிறுவனத்தினரும் உரிமம் பெற முன்வர வேண்டும்.

இதற்காக கரூர் தாலுகா அலுவலகத்தில் சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்டு, முகாம் நடத்த ஏற்பாடு செய்கிறோம். எத்தனை இடங்களில் நிதி நிறுவனத்தை நடத்தினாலும் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக உரிமம் பெற்றிட வேண்டும் என்றார்..

குற்றம்

வட்டிக்கு பணம் வாங்குகிறவர்கள் சூழ்நிலை காரணமாக அதை கட்ட தவறும் பட்சத்தில் சொத்துக்களை எழுதி வாங்குதல், அடியாட்களை வைத்து மிரட்டுதல் மற்றும் நிதி நிறுவனங்களில் முதிர்வுகாலம் முடிவடைந்தும் தொகையை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்தல் போன்றவை சட்டப்படி குற்றம் என்று இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், தமிழரசி ஆகியோர் எடுத்துரைத்தனர்.

கருத்தரங்கில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கும்மராஜா, அசோகன் மற்றும் கரூர் தாசில்தார் சக்திவேல், நிதிநிறுவன உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் நிருபர்களிடம் கூறுகையில், வேலை வாங்கித் தருவதாகவும், கடன் பெற்றுத் தருவதாகவும் கூறி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்