தளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

தளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-11 23:00 GMT
தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள காரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்டது கச்சுவாடி, பாளேக்கு கிராமங்கள். இந்த 2 கிராமங்களுக்கும் கடந்த 3 மாதமாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. குடிநீர் வழங்க கோரி சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.

இந்தநிலையில் சீராக குடிநீர் வழங்க கோரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மல்லப்பா தலைமையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாச சேகர், முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகள் உறுதி

அப்போது இந்த கிராமங்களுக்கு டிராக்டர் மூலம் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சாலை மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில விவசாய சங்க துணை தலைவர் லகுமய்யா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நாகராஜ், மாநில குழு உறுப்பினர் பூதட்டியப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்