கம்மாபுரம் அருகே மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த வாலிபர் சாவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

கம்மாபுரம் அருகே மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த வாலிபர் உயிரிழந்தார். இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-11 23:30 GMT

கம்மாபுரம்,

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் அருள்முருகன் (வயது 28). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் நல்லதம்பி(29) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் கோபாலபுரத்தில் இருந்து கம்மாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அருள்முருகன் ஓட்டினார். சு.கீணனூர் அருகே சென்ற போது, அங்கு பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அருள்முருகன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்தார்.

இதில் அருள்முருகன், நல்லதம்பி ஆகிய இருவரும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அருள்முருகன் பரிதாபமாக இறந்தார். நல்லதம்பிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அருள்முருகன் இறந்தது பற்றி அறிந்த கோபாலபுரம் பகுதி மக்கள், அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை உடனே மூடக்கோரி விருத்தாசலம்–பரங்கிப்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, சப்–இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ், புஷ்பராஜ் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், வாய்க்கால் பாலத்துக்காக கடந்த பல மாதங்களுக்கு முன்பு சு.கீணனூர் அருகே பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளம் மூடப்படாததால் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கிறது. இதுவரை 15–க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். எனவே பள்ளத்தை உடனே மூடவேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள், இன்னும் ஒரு வாரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்