திண்டுக்கல்லில் அடுத்தடுத்து போராட்டம்: குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு அடுத்தடுத்து 2 இடங்களில் பொதுமக்கள் மறியல் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-11 22:00 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.70½ கோடியில் புதிதாக பகிர்மான குழாய் அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், புதிய குழாயில் சரியாக குடிநீர் வருவது இல்லை என்று சில பகுதிகளை சேர்ந்த மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் 40–வது வார்டுக்கு உட்பட்ட குடைப்பாறைபட்டி பகுதியில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் திரண்டனர். பின்னர் திண்டுக்கல்–வத்தலக்குண்டு சாலையில் குடங்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் தெற்கு போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்கள் சமரசமாகவில்லை.

எனினும், போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பின்னரே பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

இதற்கிடையே 17–வது வார்டில் சுக்கான்மேடு, கிழக்கு ஆரோக்கியமாதாதெரு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த பெண்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். குடிநீர் கட்டண ரசீதுகளுடன் வந்த அவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக குடிநீர் வழங்கும்படி பெண்கள் முறையிட்டனர். குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பெண்கள் கலைந்து சென்றனர். திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் அடுத்தடுத்து நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்