ஒகேனக்கல் ராசிமணலில் அணை கட்ட கோரி விவசாயிகள் ஊர்வலம்

ஒகேனக்கல் ராசிமணலில் அணை கட்ட கோரி பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2019-06-12 23:00 GMT
பென்னாகரம்,

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காவிரிக்கு மாற்று காவிரியே என்ற முழக்கத்துடன் ஒகேனக்கல்லை அடுத்த ராசி மணலில் அணை கட்ட வலியுறுத்தி சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கடந்த 10-ந்தேதி பூம்புகாரில் இருந்து செங்கற்களை எடுத்து கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். இவர்கள் நேற்று காலை தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்திற்கு சென்று காவிரி ஆற்றில் பூஜை செய்தனர். பின்னர் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஊர்வலமாக ராசிமணல் பகுதிக்கு சென்றனர்.

இந்த ஊர்வலத்தில் ஏராளமான விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இவர்கள் ராசிமணல் பகுதியில் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தங்கள் ஊர்வலத்தை நிறைவு செய்தனர். ராசிமணல் காவிரி ஆற்றில் இறங்கிய விவசாயிகள் ராசிமணலில் அணை கட்ட வேண்டும். கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

பின்னர் பூம்புகாரில் இருந்து எடுத்து வரப்பட்ட செங்கற்களை அஞ்செட்டி தாசில்தார் செந்தில்குமாரிடம் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ஒப்படைத்தனர். காவிரி விவசாய சங்க தலைவர் புண்ணியமூர்த்தி, பொதுசெயலாளர் வெங்கடேசன் பொருளாளர் ஸ்ரீதர், லாரி உரிமையாளர் சங்க தலைவர் நாராயணன் அ.ம.மு.க. தர்மபுரி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் துரைராஜ், கோபிநாத் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் 125 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாக மாறி உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடியை காவிரி டெல்டா விவசாயிகள் இழந்துள்ளனர். இந்நிலையில் கடலில் கலக்கக்கூடிய 200 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க ராசி மணலில் அணை கட்ட வேண்டும்.

தமிழக அரசு, ஒகேனக்கல்லை அடுத்த ராசி மணலில் அணை கட்ட முன்வர வேண்டும். இதற்கு கர்நாடக அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அணை கட்டப்படும் போது ஒரு கரைப்பகுதி கர்நாடக அரசுக்கு சொந்தம் என்பதால் அவர்கள் அதில் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளலாம். காவிரி நீர் கர்நாடக எல்லையை கடந்த பிறகு தமிழகத்திற்கு தான் சொந்தம். இது அரசியல் அமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. காவிரி தண்ணீரை சொந்தம் கொண்டாடுவதற்கு கர்நாடகத்திற்கு உரிமை இல்லை.

எனவே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை மத்திய அரசு காவிரி ஒழுங்காற்று குழுவை தடுத்து நிறுத்த வேண்டும். ராசி மணலில் அணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அணை கட்ட தவறினால் விவசாயிகள் அனைவரும் ஒன்றுகூடி கட்டுமான பணிகளை மேற்கொள்வோம். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அணை கட்ட வலியுறுத்தி விவசாயிகளை ஒன்று திரட்டி டெல்லியில் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்