ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள் முற்றுகை

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

Update: 2019-06-12 22:15 GMT
செம்பட்டி, 

ஆத்தூர் ஒன்றியம் பாளையங்கோட்டை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் தலைமையிலான அதிகாரிகள் பாளையங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணிகள் முறையாக நடக்கிறதா? ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளபடி தொழிலாளர்கள் பணிக்கு வந்துள்ளனரா? என ஆய்வு செய்தனர்.

இதில், சுமார் 60 பேர் வரை பணியில் இல்லாதது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனே அந்த தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை என ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் செம்பட்டியை அடுத்த அக்கரைப்பட்டி ஊராட்சி மல்லையாபுரம் பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நடந்த பணிகளை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை என அவர்கள் ஆவணங்களில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த செம்பட்டி போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாங்கள் அனைவரும் மல்லையாபுரம் பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள். இன்று (அதாவது நேற்று) மதிய உணவு சாப்பிடுவதற்காக நாங்கள் வெளியே சென்ற போது, தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகளை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள், நாங்கள் மதிய உணவு சாப்பிட சென்றதை அறியாமல் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை என ஆவணங்களில் பதிவு செய்துவிட்டனர்.

எனவே நாங்கள் அனைவரும் பணிக்கு வந்ததாக ஆவணங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் தொழிலாளர்கள் தெரிவித்தனர். அதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பரிந்துரை செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்