மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், போலீஸ் நிலையம் அருகே வாலிபர் படுகொலை - அண்ணனுக்கும் அரிவாள் வெட்டு, 6 பேர் கும்பல் வெறிச்செயல்

மதுரையில் போலீஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவருடைய அண்ணனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-06-13 00:00 GMT
மதுரை, 

மதுரை பி.பீ.குளம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயம். அவருடைய மகன்கள் ரஞ்சித்(வயது 25), அஜித் (23). இதில் அஜித்துக்கு திருமணமாகி செல்லூர் மீனாம்பாள்புரம் குலமங்கலம் பகுதியில் மனைவியுடன் வசித்தார். அங்குள்ள மாதா கோவில் பகுதியில் அண்ணனும், தம்பியும் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம்.

இந்தநிலையில் அவர்களுக் கும், அந்த பகுதியை சேர்ந்த விக்னேசுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. கடந்த மாதம் இந்திராநகரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு விக்னேஷ் வந்திருப்பது ரஞ்சித், அஜித்துக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் இருவரும் கத்தியுடன் சென்று விக்னேசை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் தீவிர சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்துக் கொண்டார். அந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன், தம்பி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளிவந்தனர். அதன்படி அவர்கள் இருவரும் தினமும் காலை 10 மணிக்கு தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்து போட்டு வந்தனர். அதே போன்று நேற்றும் அவர்கள் இருவரும் கையெழுத்து போட பி.பீ.குளத்தில் இருந்து பெசன்ட்ரோடு வழியாக தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு நடந்து சென்றனர்.

போலீஸ் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் அவர்கள் சென்ற போது, 2 மோட்டார் சைக்கிள்களில் விக்னேஷ் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு வந்தது. அந்த கும்பல் ரஞ்சித், அவருடைய தம்பி அஜித் ஆகியோரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.

இதில் ரஞ்சித் வெட்டு காயத்துடன் அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் அஜித்தை அந்த கும்பல் நடுரோட்டில் ஓட. ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த படுகொலையால் சாலையில் நடந்து சென்ற மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதற்கிடையே தல்லாகுளம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அஜித்தின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மேலும் காயம் அடைந்த ரஞ்சித்தை போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் உள்பட 6 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

போலீஸ் நிலையம் அருகே வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்