வெயிலூர் என்பதை மாற்ற மரங்களை நட்டு குயில் கூவ செய்யுங்கள் நடிகர் விவேக் பேச்சு

வேலூரை வெயிலூர் என்று கூறுவதை மாற்ற மரங்களை நட்டு குயில் கூவ செய்யுங்கள் என நடிகர் விவேக் பேசினார்.

Update: 2019-06-13 23:15 GMT
வேலூர், 

ஈஷா பசுமை பள்ளி இயக்கம் மற்றும் வேலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை இணைந்து 4 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் 2-வது ஆண்டு தொடக்க விழா வேலூர் ஊரீசு கல்லூரியில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். பசுமை பள்ளி இயக்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி ரபியா முன்னிலை வகித்தார். வேலூர் மாவட்ட ஈஷா ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், நடிகர் விவேக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது:-

வேலூர் என்று சொன்னாலே நினைவுக்கு வருவது ஒன்று ஜெயில், இரண்டாவது வெயில். இதை நீங்கள் மரக்கன்றுகள் நட்டு குயில் கூவும் இடமாக மாற்ற வேண்டும். ஈஷா அமைப்பு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. அதில் மரக்கன்றுகள் நடும் பணி மிகவும் சிறப்பான பணியாகும்.

2008-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உலக வெப்பமயமாதல் பற்றி கூறினார். இன்னும் சில ஆண்டுகளில் வெப்பம் அதிகரிக்கும் என்றார். அதுபோலவே வெயில் அளவு அதிகமாக காணப்படுகிறது. அவர் மறைந்தாலும் அவர் இன்றும் மக்கள் மனதில் ஜனாதிபதியாகவும், இளைஞர்கள் மனதில் சூப்பர் ஸ்டாராகவும் வாழ்ந்து வருகிறார்.

இந்த உலகில் முதலில் தோன்றியது மரம் தான். அதன் பிறகு தான் பிற ஜீவராசிகள் பிறந்தன. ஒவ்வொரு மரமும் நமக்கு நண்பர்கள், சகோதரர்கள்.

நம்மை கருவில் சுமந்து உயிர் கொடுத்துபெற்றெடுத்தது தாய். அதுபோல பிறந்த அடுத்த நொடியில் ஆக்சிசன் தந்து நமக்கு உயிர் தந்தது மற்றொரு தாய் மரம்.

மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். அதை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நிரூபித்தார்கள். அதுபோல மரங்களை நட்டு பசுமையை திரும்ப கொண்டு வரவேண்டும்.

மரங்கள் நட்டால் மட்டுமே படிப்பு முடிந்த பின்பு மதிப்பெண்ணும், பட்டமும் வழங்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவரவேண்டும். பிறந்தநாள், திருமணநாளில் பரிசுகள் வழங்குவதை தவிர்த்து மரக்கன்றுகளை பரிசாக வழங்கினால் நன்றாக இருக்கும். உலகில் மரங்கள் இல்லை என்றால் மழை இல்லை. நிலத்தடி நீர் இல்லை. காற்று இல்லை. எதுவுமே இல்லை. எனவே நாம் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து மரங்களை நடவேண்டும். மரம் வளர்ப்பதை வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கடந்த ஆண்டு மரம் நடுதலில் சிறந்து விளங்கிய 35 பள்ளிகளுக்கு விருதுகளும், மாணவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

மேலும் செய்திகள்