மனவளர்ச்சி குன்றிய மகனுக்கு உதவித்தொகை பெற போராடிய மூதாட்டியின் காலில் விழுந்து பாராட்டிய கலெக்டர்

மனவளர்ச்சி குன்றிய மகனுக்கு உதவித்தொகை பெற போராடிய மூதாட்டியின் காலில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விழுந்து பாராட்டினார்.

Update: 2019-06-13 23:30 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் குறை கேட்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்து வருகிறது. திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. பொதுமக்கள் பட்டா, சிட்டா, ரேஷன் கார்டு, ஓய்வூதியம், ஊனமுற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மனு கொடுத்தனர்.

அப்போது எல்லப்பன் நாயுடு கண்டிகை கிராமத்தை சேர்ந்த ராணியம்மாள் (வயது 80) என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகன் உதயகுமாருக்கு உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்க கூட்டத்தில் காத்திருந்தார்.

இதனை கவனித்த கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ராணியம்மாளை அழைத்து நாற்காலியில் அமரவைத்தார். பின்னர் அவரிடம் குறையை கேட்டார். ராணியம்மாள் கொடுத்த கோரிக்கை மனு மீதான விசாரணையை உடனடியாக கலெக்டர் மேற்கொண்டு உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார். அதற்கான கடிதத்தையும் அவரிடம் வழங்கினார்.

அப்போது கலெக்டர், 80 வயதான போதிலும் மாற்றுத்திறனாளி மகனை பராமரிப்பதோடு உதவித்தொகை கேட்டு தாசில்தார் அலுவலகம் வரை வந்து போராடி பெற்றதை பாராட்டி மூதாட்டி ராணியம்மாளின் காலில் விழுந்தார். இதனை எதிர்பார்க்காத மூதாட்டி ராணியம்மாள் நெகிழ்ச்சியில் கலெக்டருக்கு வாழ்த்து கூறி ஆசி வழங்கினார். இந்த சம்பவம் அங்கு கூடி இருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்