குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை

சூளகிரி அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-06-14 22:30 GMT
ஓசூர், 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உல்லட்டி ஊராட்சிக்கு உட்பட்டது எட்டிப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு விட்டன. மேலும் குழாய்களும் பழுதடைந்து விட்டன.

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இங்கு கடும் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் கிராம மக்கள் வெகு தூரம் நடந்து சென்று, விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள கிணறுகளிலும் தண்ணீர் குறைந்ததால் கிராம மக்கள் மிகவும் அவதிக்குள்ளானர்கள். இதனை தொடர்ந்து புதிய போர்வெல் அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோரிடம் மனு வழங்கியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த எட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெபராஜ் மற்றும் ரங்கராஜன், சூளகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இன்னும் 10 அல்லது 15 நாட்களுக்குள் கிராமத்தில் மாற்று போர்வெல் அமைக்க ஏற்பாடு செய்வதாகவும், அதுவரை டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், ஒகேனக்கல் கூட்டு குடிநீரை கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் இந்த உறுதியை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்று முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் வலியுறுத்தி அங்கிருந்து கலைய மறுத்தனர். பின்னர், அதிகாரிகள் அந்த பெண்களை சமரசம் செய்தனர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்