ஆடை மாற்றுவது போல நடித்து நண்பரின் வீட்டில் நகை திருடிய பெண் கைது; சேத்துப்பட்டில் பரபரப்பு சம்பவம்

சென்னை சேத்துப்பட்டில் தனது நண்பரின் வீட்டிற்குள் சென்று ஆடை மாற்றுவதுபோல நடித்து தங்க நகைகளை திருடிச்சென்ற பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-06-14 22:30 GMT
சென்னை,

சென்னை சேத்துப்பட்டு தனம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஜெயசிம்மவர்மன் (வயது 54). இவர் கேந்திர வித்யாலயா பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி உதவியாளராக பணி செய்கிறார். இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள் கடந்த 10-ந்தேதி அன்று திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக ஜெயசிம்மவர்மன் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில் தனது வீட்டிற்கு, தனது மகனின் கல்லூரி தோழியான ரோஜா (24) என்ற இளம்பெண் வந்தார் என்றும், அவர் படுக்கை அறை வரை சென்று தனது ஆடையை மாற்றியுள்ளார் என்றும், அவர் வந்துபோன பிறகுதான் நகைகள் திருட்டு சம்பவம் நடந்தது என்றும், அவர்மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் ராஜா மேற்பார்வையில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

திருட்டு புகார் கூறப்பட்ட இளம்பெண் ரோஜா திரிசூலத்தை சேர்ந்தவர். அவரை போலீசார் பிடித்து விசாரித்தார்கள்.

விசாரணையில் நகைகளை திருடியதை ரோஜா ஒப்புகொண்டார். தான் படுக்கை அறைக்கு சென்று ஆடை மாற்றியபோது அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது. பீரோவுக்குள் தங்க நகைகள் இருப்பதை கண்டேன். உடனே அந்த நகைகளை நைசாக திருடிக்கொண்டு வந்துவிட்டேன் என்று ரோஜா தெரிவித்தார்.

அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளும் மீட்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் நகை திருடுவதற்காக இளம்பெண் ரோஜா ஆடை மாற்றுவதுபோல நடித்ததாக தெரிய வந்தது. இந்த சம்பவம் சேத்துப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்