கர்நாடக மந்திரிசபை 3-வது முறையாக விரிவாக்கம்: 2 சுயேச்சைகள் மந்திரி ஆனார்கள்

கர்நாடக மந்திரிசபை நேற்று 3-வது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் நேற்று மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Update: 2019-06-14 23:30 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

குமாரசாமி முதல்-மந்திரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 23-ந் தேதி அவர் பதவி ஏற்றார். இந்த அரசு அமைந்து ஓராண்டு முடிந்து, 2-வது ஆண்டு நடந்து வருகிறது.

முதலில் முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் மட்டும் பதவி ஏற்றனர். அதன் பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. காங்கிரசுக்கு 22 மந்திரி பதவியும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 12 பதவியும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

முதல் முறையாக கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 6-ந் தேதி நடைபெற்ற மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, 25 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து, 2-வது முறையாக கர்நாடக மந்திரிசபை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது 2 மந்திரிகள் நீக்கப்பட்டனர்.

அத்துடன் அப்போது மந்திரிசபையில் காங்கிரஸ் ஒதுக்கீட்டில் காலியாக இருந்த 6 இடங்கள் சேர்த்து மொத்தம் 8 இடங்களுக்கு 8 பேர் மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர். இந்த நிைலயில் காங்கிரசை சேர்ந்த மந்திரியாக இருந்த சி.எஸ்.சிவள்ளி 3 மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். மேலும், ஜனதா தளம்(எஸ்) ஒதுக்கீட்டில் மந்திரியாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த என்.மகேஷ் பதவியை ராஜினாமா செய்தார்.

மந்திரிசபையில் ஏற்கனவே ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஒரு இடம் காலியாக இருந்தது. இதையடுத்து மந்திரிசபையில் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 2 இடங்களும், காங்கிரசுக்கு ஒரு இடமும் என்று மொத்தம் 3 இடங்கள் காலியாக இருந்தன.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. இதனால் கர்நாடகத்தில் கூட்டணி அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தலைவர்கள் உற்சாகமாக களம் இறங்கினர். ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் களத்தில் குதித்தனர்.

இதையடுத்து பா.ஜனதா வசம் இருந்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரையும் மந்திரி பதவி ஆசை காட்டி குமாரசாமி தங்கள் பக்கம் இழுத்தார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் மந்திரி பதவி வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் தலா ஒரு இடத்தை சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்தது.

அதன்படி கர்நாடக மந்திரிசபை கடந்த 12-ந் தேதி நடைபெறும் என்று குமாரசாமி அறிவித்தார். ஆனால் எழுத்தாளர் கிரீஷ் கர்னாட் மரணம் அடைந்ததை அடுத்து, மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிவைக்கப்பட்டு 14-ந் தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி 3-வது முறையாக கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நேற்று நடைபெற்றது. புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில் நேற்று மதியம் 1 மணிக்கு நடைபெற்றது. சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சங்கர், எச்.நாகேஷ் ஆகிய இருவரும் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் வஜூபாய்வாலா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், கூட்டணி ஒருங்கிணைப்பாளர் சித்தராமையா, மந்திரிகள் டி.கே.சிவக்குமார், பண்டப்பா காசம்பூர், டி.சி.தம்மண்ணா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பட்டீல், கிருஷ்ண பைரேகவுடா, ஜமீர்அகமதுகான், எம்.சி.மணகுலி, வெங்கடராவ் நாடகவுடா, ரகீம்கான், ஆர்.பி.திம்மாப்பூர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 5 நிமிடத்தில் பதவி ஏற்பு விழா நிறைவடைந்தது.

புதிய மந்திரிகளுக்கு கவர்னர், முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். சங்கர் ராணிபென்னூர் தொகுதியில் இருந்தும், நாகேஷ் முல்பாகல் தொகுதியில் இருந்தும் கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்ெதடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு மந்திரி பதவி வழங்கியதை அடுத்து சங்கர், தனது தலைமையில் செயல்பட்டு வரும் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சியை (கே.பி.ேஜ.பி.) காங்கிரசில் இணைத்துக் கொண்டார். மந்திரியாக பதவி ஏற்பதற்கு முன்பு அவர் நேற்று காலை முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாைவ நேரில் சந்தித்து கட்சியின் இணைப்பு கடிதத்தை வழங்கினார்.

இனி அவர் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்று அழைக்கப்படுவார். வேறு கட்சிக்கு சென்றால், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குமாரசாமி பதவி ஏற்ற பிறகு நடைபெற்ற மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, சுயேச்சை எம்.எல்.ஏ.வான ஆர்.சங்கருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. அவர் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது மீண்டும் அவருக்கு 2-வது முறையாக மந்திரி பதவி கிடைத்துள்ளது. முன்னாள் சபாநாயகர் கே.பி.கோலிவாட்டை, ராணிபென்னூர் தொகுதியில் தோற்கடித்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக 2 மந்திரிகள் பதவி ஏற்றதை அடுத்து மந்திரிசபையின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கர்நாடக மந்திரிசபையில் ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது.

மேலும் செய்திகள்