டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்: அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

திருநாகேஸ்வரம் ராகு கோவிலுக்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

Update: 2019-06-14 22:15 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராகு கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோவிலுக்கு எதிரே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை.

எனவே டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பா.ம.க. முன்னாள் துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின் திருநாகேஸ்வரத்தில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் போராட்டக் குழுவினர், டாஸ்மாக் அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்ட அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. முன்னாள் மாநில துணைத்தலைவர் ம.க.ஸ்டாலின், தாசில்தார் நெடுஞ்செழியன், கோட்ட கலால் அலுவலர் ரகுராமன், திருவிடைமருதூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் போது டாஸ்மாக் கடையை அகற்ற வருவாய்துறையினர் கால அவகாசம் கூடுதலாக கேட்டனர். இதை போராட்ட குழுவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே போராட்டக்குழு தலைவர் ம.க.ஸ்டாலின் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் திருநாகேஸ்வரத்தில் நடைபெறும் என அறிவித்தார். இதனால் கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் செய்திகள்