ஆரல்வாய்மொழி பகுதியில் சூறாவளி காற்றில் 3 ஆயிரம் வாழைகள் சேதம்

ஆரல்வாய்மொழி பகுதியில் சூறாவளி காற்றில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.

Update: 2019-06-14 22:15 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். அத்துடன் சூறாவளி காற்றில் வாழை போன்ற பயிர்கள் மிகுந்த சேதம் அடைந்து வருகின்றன.

குமாரபுரத்தை சேர்ந்த விவசாயி ராமதாஸ் (வயது 39) ஆரல்வாய்மொழி சுபாஷ்நகர் பகுதியில் 3 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டிருந்தார். அந்த வாழைகள் தற்போது வளர்ந்து குலை வந்த நிலையில், அறுவடைக்கு தயாராக நின்றன.

இந்தநிலையில், தற்போது வீசி வரும் சூறாவளி காற்றில் வாழைகள் அனைத்தும் அடியோடு சாய்ந்தன. இதனால், அவருக்கு ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கண்ணீருடன் கூறினார். இதுபோல், சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் காற்றில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும், ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் மரங்கள் வேருடன் சாலை மீதும், மின்கம்பிகள் மீதும் முறிந்து விழுந்த வண்ணம் உள்ளன. இதனால், அந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சூறாவளி காற்றினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பழமையான ராட்சத புளியமரம் உள்ளது. அந்த பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீசிய காற்றில் புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதில் மரத்தின் ஒரு பகுதி அருகில் இருந்த ரெகுகிருஷ்ணன் என்பவரது வீட்டில் விழுந்தது. இதில் வீட்டின் கூரை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்