நாகர்கோவிலில் அரசு பஸ் மோதி டிப்ளமோ மாணவர் பலி நண்பர் படுகாயம்

நாகர்கோவிலில் அரசு பஸ் மோதி டிப்ளமோ மாணவர் பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-06-14 22:00 GMT
நாகர்கோவில், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பூதப்பாண்டி ஞாலம் பகுதியை சேர்ந்தவர் ஜெவர்சன் (வயது 19), டிப்ளமோ இறுதி ஆண்டு படித்து வந்தார். இவருடைய சகோதரி வீடு நாகர்கோவிலில் உள்ளது. சகோதரியை பார்ப்பதற்காக ஜெவர்சன் நேற்று ஸ்கூட்டரில் நாகர்கோவில் வந்தார். தன்னுடன் பக்கத்து வீட்டை சேர்ந்த நண்பன் பிளஸ்-1 மாணவன் அஜின் என்பவரையும் அழைத்து வந்திருந்தார்.

ஜெவர்சன் சகோதரியை பார்த்து விட்டு மாலையில் வீட்டுக்கு புறப்பட்டார். ஸ்கூட்டரை ஜெவர்சன் ஓட்டினார். அஜின் பின்னால் அமர்ந்திருந்தார்.

டதி பள்ளி சந்திப்பில் இருந்து வடசேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்புறமாக வந்த ஒரு அரசு பஸ் ஸ்கூட்டரை முந்திச் செல்ல முயன்றது. அரசு பஸ் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டரின் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி ஜெவர்சனும், அஜினும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஜெவர்சன் பஸ்சின் அடியில் சிக்கிக்கொண்டார். அவர் மீது பஸ்சின் பின் டயர் ஏறி இறங்கியது. இதில் ஜெவர்சன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அஜின் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ஜெவர்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

பின்னர் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த பரிதாப சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்