6-வது மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை : தின்தோஷி கோர்ட்டில் பரபரப்பு

6-வது மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் தின்தோஷி கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-15 23:15 GMT
மும்பை,

மும்பை பவாய் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் காட்கோபரை சேர்ந்த விகாஸ் குமார் என்பவரை கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்தனர். இவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில், போலீசார் நேற்று அவரை வழக்கு விசாரணைக்காக தின்தோஷி கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். இதில், அவர் கோர்ட்டில் இருந்த அறையில் உட்கார வைக்கப்பட்டு இருந்தார். அப்போது திடீரென அவர் அங்கு இருந்து ஓடினார். இதனை கண்ட போலீசார் அவரை துரத்தி சென்றனர். இந்தநிலையில் அவர் கோர்ட்டின் 6-வது மாடிக்கு சென்று அங்கு இருந்து கீழே குதித்தார்.

இதில் அவரது மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து போலீசார் விகாஸ் குமாரை மீட்டு கோரேகாவில் உள்ள சித்தார்த் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில், கைதி கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோர்ட்டு மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை செய்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்