1–ந்தேதி முதல் ஆகஸ்டு 17–ந்தேதி வரை அத்திவரதர் விழாவையொட்டி காஞ்சீபுரத்தில் பஸ் போக்குவரத்து மாற்றம்; கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் விழாவையொட்டி வருகிற 1–ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 17–ந்தேதி வரை பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-06-16 22:30 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–

உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா வருகிற 1–ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 17–ந் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி காஞ்சீபுரம் நகரத்தில் பஸ்களின் இயக்கம் கீழ்க்கண்டவாறு மாற்றியமைக்கப்படுகிறது.

சென்னை, திருவள்ளூர், பூந்தமல்லி, திருத்தணி, திருப்பதி, வேலூர், ஓசூர், பெங்களூரு போன்ற இடங்களுக்கு புறப்படும் மற்றும் வந்தடையும் பஸ்கள் அனைத்தும் ஒலிமுகமது பேட்டையில் அமையவுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

காஞ்சீபுரத்தில் இருந்து மாகரல் வழியாக உத்திரமேரூர் இயக்கப்படும் பஸ்கள் வந்தவாசி, திண்டிவனம், திருச்சி, புதுச்சேரி மற்றும் செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்கு புறப்படும் மற்றும் வந்தடையும் பஸ்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஓரிக்கை பணிமனைக்கு எதிராக அமைய உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

காஞ்சீபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வழியாக தாம்பரம், செங்கல்பட்டு கல்பாக்கம், மாமல்லபுரம் போன்ற இடங்களுக்கு புறப்படும் மற்றும் வந்தடையும் பஸ்கள் அனைத்தும் காஞ்சீபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பழைய ரெயில் நிலையம், வையாவூர், நத்தப்பேட்டை வழியாக சென்று வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படும்.

காஞ்சீபுரம் நகரத்தில் இயக்கப்படும் அனைத்து நகர பஸ்களும் வழக்கம் போல் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

காஞ்சீபுரம் நகரத்தின் வழியாக வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் சென்னை – செய்யாறு, திருவண்ணாமலை, போரூர் பஸ்கள் ஒலிமுகமதுபேட்டை, கீழம்பி, கீழ்கதிர்பூர் புறவழிசாலை வழியாக திண்டிவனம் சாலையை சென்றடைந்து வழக்கம் போல் இயக்கப்படும்.

தாம்பரம் – செங்கல்பட்டு போன்ற இடங்களில் இருந்து காஞ்சீபுரம் வழியாக வேலூர், பெங்களூரு, திருப்பதி, திருத்தணி போன்ற ஊர்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் பெரியார் நகர், மிலிட்டரி ரோடு வழியாக ஓரிக்கை வந்தடைந்து பின்னர் செவிலிமேடு, கீழ்கதிர்பூர் புறவழிச்சாலை வழியாக இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்