விழுப்புரத்தில் சாலை விரிவாக்க பணிக்காக காந்தி சிலையை அகற்ற முயற்சி; பணிகளை தடுத்து நிறுத்தி காங்கிரசார் போராட்டம்

விழுப்புரத்தில் சாலை விரிவாக்க பணிக்காக காந்தி சிலையை அகற்ற முயற்சி செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-16 23:15 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலும், சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும் விழுப்புரம் நேருஜி சாலையில் நான்குமுனை சந்திப்பில் இருந்து மாதா கோவில் பஸ் நிறுத்தம் வரை சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. வணிக வளாகம், கடைகள் என்று பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் நேருஜி சாலையில் மகாத்மாகாந்தி சிலை சாலையோரமாக இருப்பதால் இந்த சிலையை அகற்ற வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே கோரிக்கை இருந்து வந்தது.

இந்நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக நேற்று அதிகாலையில் நெடுஞ்சாலைத்துறையினர், பொக்லைன் எந்திரத்தை கொண்டு வந்து காந்தி சிலையை அகற்றுவதற்காக சுற்றிலும் பள்ளம் தோண்டியுள்ளனர். இதனை அறிந்த காங்கிரஸ் கட்சியினர் அங்கு திரண்டு வந்து சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு பணிகளை தடுத்து நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் குலாம்மொய்தீன், நகர தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் தயானந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவா, சுரேஷ்ராம் உள்பட பலர் கலந்துகொண்டு காந்தி சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு உடனடியாக காந்தி சிலையை அகற்றும் முயற்சி கைவிடப்பட்டது.

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் நகர போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், எங்களிடம் எந்த தகவலையும் தெரிவிக்காமல் சிலையை அகற்ற முயற்சித்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதுபற்றி நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், காந்தி சிலையை முற்றிலும் அகற்றப்போவதில்லை, சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்டு வேறொரு இடத்தில் வைக்கப்பட உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு அவர்கள் தான் காரணம் என்றனர். இந்த பிரச்சினை தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரி தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்