மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்: தலைவராக குமாரசாமி போட்டியின்றி தேர்வு

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவராக குமாரசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2019-06-16 23:00 GMT
நாமக்கல்,

நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்துக்கு அடுத்த 3 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலை நடத்த திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர் அனிதாவேலு தலைமையில் தேர்தல் குழு அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த குழுவிடம் தலைவர், செயலாளர், பொருளாளர், 3 துணைத்தலைவர்கள், 3 இணைச்செயலாளர்கள் என 9 பதவிகளுக்கு மொத்தம் 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சம்மேளன தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் குமாரசாமி, செயலாளர் பதவிக்கு நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வாங்கிலி, பொருளாளர் பதவிக்கு தற்போதைய செயலாளர் சேலம் தனராஜ் ஆகிய 3 பேரும், 3 இணைச் செயலாளர்கள் பதவிகளுக்கு பெரியகுளம் நிஜாத் ரகுமான், பவானி குமாரபாளையம் செல்வராஜா, திருச்சி சுப்பு ஆகியோர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், அவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் 3 துணைத்தலைவர் பதவிகளுக்கு பரமத்திவேலூர் ராஜூ என்கிற ராமசாமி, கோவை முருகேசன், தர்மபுரி மாது, மதுரை சாத்தையா என 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். எனவே இந்த 3 பதவிகளுக்கும் நேற்று நாமக்கல் வள்ளிபுரத்தில் உள்ள மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் சம்மேளனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 88 கிளை சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் 439 பேர் வாக்களிக்க அங்கீகாரம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 392 பேர் மட்டுமே வாக்களித்தனர். இந்த வாக்குகள் மாலையில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.அதன்படி பரமத்திவேலூர் ராஜூ என்கிற ராமசாமி 278 வாக்குகளும், மதுரை சாத்தையா 240 வாக்குகளும், கோவை முருகேசன் 231 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். தர்மபுரி மாது 174 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியதாக தேர்தல் குழுத்தலைவர் அனிதாவேலு அறிவித்தார்.

மேலும் செய்திகள்