க.பரமத்தி அருகே பால தடுப்பு சுவரில் கார் மோதியதில் பாட்டி-பேரன் பலி 3 பேர் படுகாயம்

க.பரமத்தி அருகே பால தடுப்பு சுவரில் கார் மோதியதில் பாட்டி-பேரன் பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-06-17 22:45 GMT
க.பரமத்தி,

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை சேர்ந்தவர் கிளாரன்ஸ் விமல்ராஜ் (வயது 49). இவரது மனைவி சுதா (35), மகன் ரியான்ஸ் (15), கிளாரன்ஸ் விமல்ராஜின் தாயார் செபஸ்டிமேரி (65).

சுதாவின் தாயார் பரமேஸ்வரி (60), கிளாரன்ஸ் விமல்ராஜின் தம்பியும், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் வசித்து வரும் ஜூட்விமல்ராஜின் மகனுமான ஆண்டனி பிளாசோ (3). இவர்கள் 6 பேரும் இலங்கை அகதிகள் ஆவர். இந்த நிலையில் திருச்சியில் நடந்த உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வெள்ளக்கோவிலில் இருந்து காரில் வந்தனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு, நேற்று காலையில் 6 பேரும் அதே காரில் வெள்ளக்கோவிலுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

காரை கிளாரன்ஸ் விமல்ராஜ் ஓட்டினார். அந்த கார் கரூர்-கோவை சாலையில் க.பரமத்தி அருகே உள்ள பவித்திரம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பால தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி பரமேஸ்வரியும் பேரன் உறவுமுறை கொண்ட ஆண்டனிபிளாசோவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கிளாரன்ஸ் விமல்ராஜ், சுதா, ரியான்ஸ் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். செபஸ்டிமேரி எந்த காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக க.பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் பரமேஸ்வரி, ஆண்டனிபிளாசோ ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்