நாமக்கல் அருகே காவலாளி கொலையில் 4 பேர் கைது ஆள்மாறாட்டத்தில் நடந்தது அம்பலம்

நாமக்கல் அருகே இரவு காவலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் ஆள்மாறாட்டத்தில் இந்த கொலை நடந்து இருப்பது அம்பலமாகி உள்ளது.

Update: 2019-06-17 22:45 GMT
நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள எரையம்பட்டியை சேர்ந்தவர் பழனி (வயது 77). இவர் நாமக்கல்லை அடுத்த முதலைப்பட்டியில் உள்ள தனியார் கார் பட்டறையில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார்.

கடந்த 14-ந் தேதி இரவில் கார் பட்டறையில் தூங்கிக்கொண்டு இருந்த பழனியை மர்ம ஆசாமிகள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த கொலை வழக்கில் போலீசார் தேடி வந்த திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணபிரான் காலனி சதீஷ்குமார் (30), பள்ளிபாளையம் சில்லாங்காடு ராம்பிரபு (32), ஐந்துபனை ஜெ.ஜெ.நகர் சசிக்குமார் (23) மற்றும் சத்திநாய்க்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 18 வயது வாலிபர் என 4 பேர் முதலைப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷிடம் சரண் அடைந்தனர்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், அவர்கள் 4 பேரையும் நல்லிபாளையம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தபோது பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் சதீஷ்குமார் ஏற்கனவே தனது தாய்மாமா மாதேஸ்வரன் என்பவரை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவரது அண்ணன் ராமகிருஷ்ணன், ஹரிபிரசாத் ஆகியோருடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்து இருப்பதும், அன்று மாதேஸ்வரனின் கார் பட்டறைக்கு தீ வைத்து இருப்பதும், இது தொடர்பான வழக்குகள் சேந்தமங்கலம் மற்றும் நல்லிபாளையம் போலீஸ் நிலையங்களில் விசாரணையில் இருந்து வருவதும் தெரியவந்தது.

இதற்கிடையே இந்த வழக்குகளில் 2 மாதம் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வெளியே வந்த சதீஷ்குமார், நல்லிபாளையம் போலீஸ் நிலையத்தில் தினசரி கையெழுத்து போட்டு வந்தார். இவரை அடிக்கடி ஒருவர் நோட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த நபரை பிடித்து விசாரித்தபோது மாதேஸ்வரனின் கார் பட்டறையை தற்போது அவரது மைத்துனர் யுவராஜ் நடத்தி வருவதாகவும், அவர் சதீஷ்குமார் உள்ளிட்ட 3 பேரையும் தீர்த்துக்கட்ட திட்டம் போட்டு இருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து சதீஷ்குமார், யுவராஜை தீர்த்துக்கட்ட முடிவு செய்து உள்ளார். இதற்காக பள்ளிபாளையம் சில்லாங்காடு பகுதியை சேர்ந்த ராம்பிரபு என்பவரை அணுகி உள்ளார். அப்போது அவரிடம் யுவராஜை கொலை செய்ய ரூ.5 லட்சம் பேரம் பேசி, முன்பணமாக ரூ.1 லட்சம் கொடுத்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

அதன்படி கடந்த 14-ந் தேதி இரவு கார் பட்டறைக்கு யுவராஜை கொலை செய்ய வந்த கூலிப்படையை சேர்ந்த ராம்பிரபு, சசிக்குமார் மற்றும் 18 வயது நிரம்பிய வாலிபர் என 3 பேரும் யுவராஜ் என நினைத்து, ஆள் மாறாட்டத்தில் இரவு காவலாளி பழனியை கொலை செய்து இருப்பதும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

இதையடுத்து சரண் அடைந்த சதீஷ்குமார் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ராம்பிரபு, சசிக்குமார், 18 வயது நிரம்பிய வாலிபர் என 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் மறைமுக தொடர்புடைய நபர்கள் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவு காவலாளி பழனி கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு 4 பேரை கைது செய்த நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, நல்லிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார்.

மேலும் செய்திகள்