மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

திருவொற்றியூரில் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-17 23:15 GMT

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. இது குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வழக்கம்போல் திருவொற்றியூர் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்ட அந்த பகுதி பொதுமக்கள், மின்வாரிய அலுவலகத்துக்கு பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் செய்ய முயன்றனர். ஆனால் தொலைபேசியை யாரும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த திருவொற்றியூர், திருச்சிணாங்குப்பம், தேரடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சுமார் 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, காலடிப்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மின் வெட்டை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

அப்போது அங்கிருந்த மின்வாரிய ஊழியர்கள், உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன்பிறகு நள்ளிரவு 12 மணியளவில் மீண்டும் மின்சாரம் வந்தது. அதன்பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்