கூடலூரில் பலத்த மழை

கூடலூரில் பலத்த மழை பெய்தது.

Update: 2019-06-17 22:15 GMT
கூடலூர்,

கூடலூர் பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் பெய்து வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆனால் நடப்பு மாதத்தில் பருவமழை இதுவரை தீவிரம் அடையவில்லை. கடந்த வாரம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெயில் காணப்பட்டது. மேலும் பாண்டியாறு, ஓவேலி, மாயார், பொன்னானி, சோலாடி உள்பட பல ஆறுகளில் தண்ணீர் வரத்தும் குறைவாக காணப்படுகிறது. பருவமழை சரிவர பெய்யாமல் உள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் கூடலூரில் வெயில் காணப்பட்டது. மாலை 3 மணிக்கு திடீரென வானத்தில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் சுமார் 1½ மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இதனால் கூடலூர் நகர முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. மேலும் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்ததால் ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கேரளா, கர்நாடகாவுக்கு இயக்கப்பட்ட வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டவாறு சென்றன.

இதேபோல் பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். இதனிடையே நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இருப்பினும் தொடர் மழை பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை கோடை வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு விடுகிறது. பருவமழை ஜூன் மாதம் முதல் நன்றாக பெய்தால் மட்டுமே பணப்பயிர்களான இஞ்சி, குறுமிளகு, காபி, ஏலக்காய் சரியான பருவத்தில் விளையும். காலம் தவறிய மழையால் பயிர்கள் விளைச்சல் பாதிக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்