மேலூர் அருகே வாலிபர் அடித்து கொலை; பதற்றம் - போலீஸ் குவிப்பு

மேலூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து அடித்து கொலை செய்யப்பட்டார்.

Update: 2019-06-18 00:30 GMT
மேலூர்,

மேலூரை அடுத்த கொடுக்கம்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு கோவில் திருவிழாைவயொட்டி நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பார்க்க அ.கோவில்பட்டியை சேர்ந்த ராம்பு (வயது 23), கொடுக்கம்பட்டியை சேர்ந்த சங்கையா(30), சுபாஷ்(19), கச்சிராயன்பட்டியை சேர்ந்த தயாளன்(19) ஆகிய 4 பேரும் சேர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் கொடுக்கம்பட்டி அருகில் வந்தபோது ஒரு கும்பல் ராம்பு உள்பட 4 பேரையும் வழிமறித்தனர்.

பின்னர் அந்த கும்பல், அவர்கள் 4 பேரையும் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தாக்கப்பட்டதில் ராம்பு, சங்கையா, நேதாஜி, தயாளன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராம்பு பரிதாபமாக இறந்துபோனார்.

முன்னதாக, சிகிச்சையில் இருந்தவர்களின் உடல்நிலை குறித்து தகவல் தெரிவிக்காத மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து ராம்புவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்புள்ள பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சுமார் 1 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் ஏற்பாடு செய்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைய செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கொடுக்கம்பட்டி பகுதியில் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்படும் வகையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மேலூர் தாசில்தார் சிவகாமி நாதன் ஆகியோர் அந்த கிராமத்தில் விசாரணை நடத்தினர்.இந்த சம்பவம் தொடர்பாக கொடுக்கம்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் உள்பட 15 மற்றும் பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் சிலரை கீழவளவு போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்