புதுச்சேரி கடைகளில் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து திருடிய 2 வாலிபர்கள் கைது

புதுச்சேரி கடைகளில் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து திருடிய சென்னையை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-22 21:30 GMT

புதுச்சேரி,

புதுவை முதலியார்பேட்டை ஜான்பால் நகரை சேர்ந்தவர் ராஜீவ் (வயது 33). இவர் அண்ணசாலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவருடைய கடைக்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் பொருட்கள் வாங்குவதுபோல் கடை முழுவதும் சுற்றி வந்து பொருட்களை எடுத்து பார்த்து விலை விசாரித்தனர். ஆனால் எந்த பொருட்களையும் வாங்காமல் சென்றனர்.

இதனால் அவர்கள் மேல் சந்தேகம் கொண்ட ராஜீவ் கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது அந்த வாலிபர்கள் ரூ.4,500 மதிப்பு கொண்ட கைக்கடிகாரம் ஒன்றை திருடி செல்வது பதிவாகியிருந்தது.

இதுதொடர்பாக அவர் பெரியகடை போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் அந்த கடை அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது அவர்கள் கைக்கடிகாரத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் சென்னை முகப்பேரை சேர்ந்த சூரியகுமார் (வயது 20), மண்ணூர்பேட்டையை சேர்ந்த மோகன்குமார் (21) என்பது தெரியவந்தது. சென்னையிலிருந்து புதுவை வந்த இவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதும், மற்றொரு கடையில் கேமிராவையும் திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கைக்கடிகாரத்தையும், கேமராவையும் பறிமுதல் செய்தனர். மேல் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்