வாடிப்பட்டி அருகே இருவேறு விபத்து; 14 பேர் படுகாயம்

வாடிப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 14 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2019-06-23 22:30 GMT
வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே வடுகபட்டியில், மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. வடுகபட்டி அரிசி ஆலை பகுதியில் அந்த கார் சென்றபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் தடுப்புச்சுவரில் மோதியதில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயமடைந்தனர். வாடிப்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், காரில் சென்றவர்கள் மதுரை விராட்டிபத்தை சேர்ந்த ஜெயின்ஹரீஸ்(வயது 25) மற்றும் அவரது நண்பர்கள் என்பதும், அவர்கள் கோவையில் நடந்த ஆணழகன் போட்டியில் கலந்துகொள்ள சென்றபோது விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் 4 பேரும் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ், வாடிப்பட்டியை அடுத்த நகரி பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்தனர். உடனே காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த இருவேறு விபத்துகள் குறித்தும் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்